கைகளுக்கு அழகு தரும் மருதாணி


பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. மருதோன்றியில் அளப்பரிய மருத்துவக் குணங்கள் உள்ளதால் தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர்.
இலைகளின் சாறு தசையை இறுக்கும் தன்மை உடையவை. இலைகளின் சாறு உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. மலர்கள் தூக்கத்தை தூண்டக் கூடியவை.
இலைகள் தோல் வியாதிகளுக்கு நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுகின்றன. இலைச்சாறு மேல் பூச்சாகக் கொப்புளங்கள், தீக்காயங்கள் மற்றும் தோல் வியாதிக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.
விரல்களுக்கு மருதாணி இட்டு வருவதால் நகக்கண்ணிலுள்ள இடுக்குகளில் படிந்துள்ள அழுக்கோடு கூடிய நுண்ணுயிர் கிருமிகள் அழிய அதிக வாய்ப்புண்டு. நகச்சுற்று என்ற கொடுமையான வலி நோய் தடுக்கப்படுகிறது. சுத்தமான தேங்காயெண்ணெயில் உலர்ந்த இலைகளைச் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் மயிர் உதிர்வது தடுக்கப்படும். நரை, பூனைமயிர் உள்ளவர்கள் தேய்த்து வந்தால் கேசம் கறுப்பாகும்
கேசத் தைலத் தயாரிப்பிற்கும், வாசனைத் தைலங்கள் தயாரிப்பிற்கும் மருதாணி எண்ணெய் உபயோகமாகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதன் சாறு, வெயில் காலங்களில் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும். கேசத்திற்கு குளிர்ச்சியையும், கேசப் பராமரிப்பில் கிரியா ஊக்கியாகவும் பயன்படுகிறது.
''மருதாணி போடுவதால் வெள்ளை முடி நிறமாகும். தொடர்ந்து நரைக்காது. அதோடு, முடி கொட்டுவதும் நின்று போகும். ஆனால், வெறும் மருதாணி, முடியை வறட்சியாக்கிவிடும். மருதாணியுடன் மேலும் சில அயிட்டங்களை சேர்த்தால் கூந்தல் மிருதுவாகும். சளி பிடிக்காது. சைனஸ் பிரச்னை இருப்பவர்களும் பயன்படுத்தலாம்.

மருத்துவப் பயன்கள் :
கேசம் பளபளப்பாக இருக்கும். கேசத்தின் வேர்க்கால்கள் வலுவாகி முடி உதிர்வதைக் தடுக்கும். கேசம் நீண்டு வளரத் தூண்டும். ஈரத்தன்மையைத் தக்க வைக்கும். கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். சோர்வகற்றும். பூக்கள் துயிலைத் தூண்டுவிக்கும்.

மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும்.
நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

No Response to "கைகளுக்கு அழகு தரும் மருதாணி"